<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

கேரள வெள்ள நிவாரணத்திற்கு ஒரு நாள் அடிப்படை ஊதியம் மற்றும் சில செய்திகள்




மனித வள இயக்குனருடன் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு சந்திப்பு



JE இலாகா தேர்வில் மதிப்பெண்களில் தளர்வு- BSNL ஊழியர் சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

28.01.2018 அன்று நடைபெற்ற JE LICE தேர்வில் கேள்வித்தாள்கள் மிக கடுமையாக இருந்தது. மொத்தமுள்ள 9185 காலிப்பணியிடங்களுக்காக நடைபெற்ற அந்த தேர்வில் 1800 தோழர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். கேள்வித் தாள்கள் கடினமாக இருந்த காரணத்தால் அதிலும் வெறும் 111 தோழர்கள் மட்டுமே தேர்வு பெற்றனர். எனவே நமது BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து நிர்வாகத்திடம் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற DR TTA தேர்விற்கு வழங்கியது போன்றதொரு தளர்வை இந்த தேர்வை எழுதிய தோழர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தெளிவானதொரு கோரிக்கையை முன்வைத்தது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற DR JTO தேர்விற்கு ஒவ்வொரு பகுதிக்கும் 10%மும், மொத்த மதிப்பெண்களில் 10%ம் தளர்வை கொடுத்து 01.06.2009ல் கார்ப்பரேட் அலுவலகத்தில் உத்தரவு வெளியிடப்பட்டது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற DR TTA தேர்விற்கு இது போன்ற ஒரு தளர்வை கொடுக்க முடியும் என்றால் அதே போன்ற தளர்வை 28.01.2018 அன்று நடைபெற்ற JE LICE தேர்விற்கும் வழங்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை. தொடர்ச்சியாக நமது கோரிக்கையினை நிர்வாகம் மறுத்த போதும், நமது சங்கம் அந்த கோரிக்கையை கைவிட தயாராக இல்லை. நமது தொடர் வற்புறுத்தலின் ஒரு பகுதியாக 10.07.2018 அன்று CMD BSNLஇடம் நமது பொது செயலாளர் உள்ளிட்ட மத்திய சங்க நிர்வாகிகள் விவாதிக்கும் போது நமது தொடர் கோரிக்கையின் நியாயத்தை எடுத்து உரைத்தனர். அதனை கேட்ட CMD BSNL தேவையானவற்றை செய்வதாக தெரிவித்திருந்தார். மீண்டும் நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மனித வள இயக்குனரிடமும், GM(Rectt)இடமும் 27.08.2018 அன்றும் விவாதிக்கப்பட்டது. இறுதியாக நமது கோரிக்கையினை நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. வெற்றி பெற உள்ள அனைத்து தோழர்களுக்கும், நமது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட நிர்வாகத்திற்கும் பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாக்கிக் கொள்கிறோம்.

ஊதிய மாற்றக் குழுவின் மூன்றாவது கூட்டம்

ஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் தலைமையில் 27.08.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தின் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு பெற்றனர். கடந்த கூட்டத்தில் ஊழியர் தரப்பு தங்களின் முன்மொழிவை கொடுத்திருந்தது. இந்தக் கூட்டத்தில் நிர்வாக தரப்பு அவர்களின் முன் மொழிவை முன்வைத்தது. நிர்வாக தரப்பில் புதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவிற்கு பழையை ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச ஊதியத்தை 2.4ஆல் பெருக்கி NE1ன் குறைந்த பட்ச ஊதிய விகிதத்தை 18,600 ரூபாய் என முன்வைத்தது. ஊழியர் தரப்பு அதனை ஏற்றுக் கொள்ளாமல் பெருக்கல் காரணி என்பது 2.44ஆக இருக்க வேண்டும் என்றும் அதன் காரணமாக E1 ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவு ரூ.18,934/- என இருப்பதை முழுமையாக்கி ரூ.19,000/- என இருக்க வேண்டும் என்று வாதிட்டனர். அத்துடன் அனைத்து ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவை கணக்கிட பெருக்கல் காரணியாக 2.44 என்பதை அடிப்படையாக வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதனை பரிசீலிக்க நிர்வாக தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. 
ஊதிய விகிதத்தின் கால அளவு 43 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் முன்வைத்த ஆலோசனைக்கு பதிலளித்த நிர்வாக தரப்பு, இதன் காரணமாக ஓய்வூதிய பங்கீட்டில் செலவு கடுமையாக உயரும் என தெரிவித்தது. ஊதிய மாற்றத்திற்கு பின் எந்த ஒரு ஊழியரும் ஊதிய தேக்க நிலையை அடைந்துவிடாமல் இருப்பதற்கு தேவையான கால அளவு இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் மீதான விவாதத்தை 10.09.2018 அன்று நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது. 
பேச்சு வார்த்தை மிக மெதுவாக செல்வது குறித்து ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர். இதே வேகத்தில் சென்றால் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க முடியாது என்று தெரிவித்த அவர்கள் இன்னமும் குறைந்த கால இடைவெளியில் இந்தக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.